Tuesday, May 7, 2013

அயராது முயன்றால் பிழையின்றி எழுதலாம்..





அதைத்தான் நானும் முயற்சி பண்ணிட்டிருக்கேன்..

வணக்கம் ட்விட்டர்/சந்து வாழ் மக்களே!!

முதலில் ஒரு தன்னிலை விளக்கம்:-

      பிழைதிருத்தி என்ற பெயரை சுமப்பதால் நான் தவறே செய்யாதவன் என்ற பொருள் கொள்ளவேண்டாம்.. உதாரணமாக பிழைகளை திருத்த உதவும் இந்த பதிவில் எத்தனை பிழை நேரப்போகிறது என்பது அவனுக்கே வெளிச்சம்..

மற்றபடி பிழைதிருத்தி என்பது இந்த சமூகத்தின் பிழைகளை திருத்த நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வைத்துக்கொண்ட பெயர் என்று நீங்களாகவே ’காமாசோமா’வென்று முடிவெடுத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.

இங்கு நான் சொல்ல முயல்வது எல்லாம் நம் சகட்விட்டர்கள் சகட்டுமேனிக்கு சரளமாக செய்கின்ற, என் சிற்றறிவிற்கு எட்டிய பிழைகளை சுட்டிக்காட்டத்தான்.. (உனக்கு எதுக்கு இந்த அப்பாடக்கர் வேலை??? என்று என் மூக்கில் குத்துபவர்களுக்கு.. என் பதில்..  இன்று போய் நாளை ’வாரு’ங்கள்.. என்பதுதான்..)


பிழைகள் பல்வகை!!

      அடிப்படை இலக்கணத்துக்கான குறைந்தபட்ச அறிவும், உங்களுக்குள்ளே வாதிடும் குணமும் இருந்தாலே தமிழ் உங்களுக்கு வசப்படத்துவங்கும்…

வல்லினம்    6 எழுத்துக்கள்  -   க ச ட த ப ற
மெல்லினம்   6 எழுத்துக்கள்  -   ங ஞ ண ந ம ன
இடையினம்   6  எழுத்துக்கள்  -  ய ர ல வ ழ ள

இதை ஞாபகம் வைத்துக்கொள்வது நல்லது..

ஒலி உணர்வில் ஒரே போன்று ’ன’ ‘ண’ ‘ந’ மற்றும் ’ர’ ‘ற’ இடமாற்றுப் பிழைகளை தொடர்ந்து வேறுபாடு அறிந்து படித்து எழுதுவதன் மூலமே தெரிந்துக்கொள்ள முடியும்..
உ.ம்: எரி – எறி.. உரிய (ஒன்றுக்கு சொந்தமான..) – உறிய (உறிஞ்சுதல்..)


அடுத்து சந்திப்பிழைகள்தான்..

சந்திப்பிழைகள் – பெரும்பாலும் ஒருமை பெயருக்கு பன்மை வினைச் சொல்லைக் கொண்டு முடிப்பது.. அதேப்போல பன்மை பெயர்ச்சொல்லுக்கு ஒருமையில் முடிப்பது.. மேலும் உயர்திணை பெயருக்கு அஃறிணை வினைக்கு உயர்திணை வினை என முடிப்பதுதான்.


1.   முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டியது, ‘ற்’ என்ற வல்லின மெய்யின் அடுத்து எந்த மெய்யெழுத்தும் சேர்க்கக் கூடாது..
உதாரணம் :  பயிற்ச்சி தவறு.. பயிற்சிதான்.. அதைப்போலவே  செயற்க்கை அல்ல செயற்கைதான்..  இயற்க்கை  - இயற்கை

இது புரிந்திருக்கும்.. அதேப்போல ’ற்’ என்ற இந்த வல்லின மெய் எந்த சொல்லின் இறுதியிலும் தொக்கி நிற்காது.. மற்ற எந்தவொரு மெய்யும் இறுதி எழுத்தாக வரலாம்..
     
2.   அடுத்து எப்போதெல்லாம் மெய்யெழுத்து சந்தியாக வரலாம் வரக்கூடாதென்பதை புரிந்துக்கொள்ளுதலும் நலமே..

பசிபிணி.. பசிப்பிணி இரண்டில் எது சரி..??

பசிபிணி – பசியும் பிணியும் என்று பிரித்து படிக்க வாய்ப்பு இருப்பது தெரிகிறதா..

ஏற்கனவே ஏடாகூடமாய் கருத்துப் புரிதல் கொண்ட நம் இணைய மக்களுக்கு இப்படியெல்லாம் வாய்ப்பு கொடுக்கக் கூடாது. அதனால் பசிப்பிணி என்று வார்த்தையை அழகாக முடித்தல் நலம். பசியாகிய பிணி என்று பசி ஒரு நோயாக உருவகப்படுத்தியுள்ளது புரிகிறதா..

ஸோ ஸிம்ப்பிள்..

சந்தி இல்லாமல் சேரும் வார்த்தைகள் சேர்த்து உச்சரித்தால் அது வேறு பொருள் தருமா என சொல்லிப்பாருங்கள்.. தருமாயின் சந்தியை கோர்த்துவிடல் நலம்..

உதாரணம்.. ’வெட்டுக்குத்து’.. ஆஹா.. இது கொஞ்சம் ரணம்தான்.. வேற எதாவது சொல் எடுத்துக் கொள்ளலாம்.. (எடுத்துக்கொல்லலாம்னா அர்த்தமே மாறிடும்..)
தட்டுப்பாடு.. இதை தட்டுபாடு என்று எழுதினால் என்னவாகும்??
தட்டிக்கொண்டே பாட்டு பாடுதல் என்ற பொருளை கொள்ளுமல்லவா..
தட்டுப்பாடு என்றால் பஞ்சம் என்று நேரடியாக சொல்லி மேட்டரை முடித்துவிடலாம் இல்லையா?

பட்டுப்போனது.. பழசாய்டுச்சு / பட்டுபோனது பட்டு விற்றுபோனது, இனி என்னவெல்லாமோ பொருள் வருமே!!

அந்நிய மொழியினை நேரடியாக எழுதுவதில் இவ்வளவு மெனக்கெட வேண்டியது இல்லையாயினும் அதிலும் பொருள் மாறாமலிருக்க  கொஞ்சம் கவனம் தேவைப்படுகிறது..

க ச ட த ப ற ஆறு வல்லின சொற்களில் இந்த ட வும் ற வும் சொல்லின் முதலில் வராது..  க ச த ப நான்கெழுத்துக்கள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்..

கன்னி, சங்கு, தப்பட்டை, பாடை – யதேச்சையான உதாரணங்கள்தான்.. முதலில் உள்ளதை ஆராய்ந்தபடி இருந்தீர்களேயானால் பின்னால் உள்ளவை தானாக உம்மைச்சேரும்..  ச்சும்மா ஜாலிக்கு..  அப்புறம் இந்த சொல்லில் உள்ளதைபோல் எந்த மெய்யெழுத்துக்களும் சொல்லின் முதலில் வாரா.. இது ச்சும்மா ஜாலிக்கு..

3.   அடுத்து.. சுட்டெழுத்துக்கள் அ இ உ மூன்று மட்டுமே.. (உ எப்படி சுட்டெழுத்து என்று கேட்கிறீர்களா? உப்பக்கம் என்றொரு சொல் திருக்குறளில் வருகிறது.. இன்று ’உ’ வை பயன்படுத்தி வேறு எந்த சுட்டுச்சொல்லும் என் நினைவில் இல்லை..)

’அ’ ’இ’ ’உ’ சுட்டெழுத்துக்களும், எ என்ற வினா எழுத்தும் தனியாகவோ,சொல்லின் கடைசியில் இயம்பி வேறு சொல்லுடன் புணர்கையில் அது வல்லின எழுத்தில் துவங்கும் சொல் என்றால் (க ச த ப ) அந்த இடத்தில் வல்லினம் மிகும்..
அதாம்ப்பா.. அ + கரை, இதில் அ கரை என்ற சொல்லுடன் சேர்கையில் அக்கரை என்று வரும்.. க என்ற வல்லினம் க் எக்ஸ்ட்ராவாக வந்துள்ளது புரிகிறதா..

வந்துச் சென்றான் (து –வில் த் + உ / செ வில் ச் மிகுந்து உள்ளது)
குற்றப்பத்திரிக்கை (ற – ற் + அ / ப வில் ப்..)

4.   அடுத்து  ’ய்’ என்ற மெய்யெழுத்தின் அடுத்து வரும் வல்லினம் மிகும்..
உ.ம்: பொய்ப்பிரச்சாரம்.. ஓநாய்க்கிழவன், வாய்ப்பாட்டு இன்னும் நிறைய..

5.   அதேபோல ’ஐ’காரம்.. ஐ! காரம் இல்லை...
ஐகாரத்தினை தொடர்ந்து வரும் மெய்யெழுத்து மிகும்..

கீழைக்காற்று (ழை – ழ் + ஐ)
கைத்தொழில் / தைப்பூசம்

6.   ஒரு வினைச்சொல் ‘இ’ ’ய்’ ’ஆ’ ’ஊ’ ’என’ ’அ’ எழுத்துக்களில் முடிந்தால் அதன் அடுத்துவரும் சொல்லின் முன் வரும் மெய்யெழுத்து மிகும்..

(மிகும் மிகும்னே சொல்லுற இடத்துல எல்லாம் மெய்யெழுத்து எக்ஸ்ட்ரா போட்டுக்கணும் :0)

ஓட்டிச்சென்றான்  (டி = ட் + இ வருதா? அதான் ச் மிகுந்து வந்துடுச்சு..)
நெய்ப்பானை      (ய் வந்ததால பாவுல இருக்கும் ப் மிகுந்து வந்துட்டு..)
கூவாக்குயில்     (வா = வ் + ஆ )
உண்ணூச்சென்றான் (ஊ)   மெல்லத்தவித்தாள் (த்+அ)
பட்டெனச்சொல்கிறார் (என)

புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்..

7.   எதிர்மறை வினையெச்சம் (ஓடாது, பிடித்து ) மற்றும் எதிர்மறை பெயரெச்சங்கள் (சொல்லா.., அறியா..  ) போன்ற சொற்களின் அடுத்த சொல்லில் வரும் வல்லின மெய் மிகும்..

ஓடாதுக்கிடக்கும் / பிடித்துப்போட்டான்

க் ப் மிகுந்து வந்துள்ளது தெரிகிறதா..

8.   இரண்டாம் வேற்றுமை உருபு ’ஐ’ என்ற எழுத்தின் அடுத்து வரும் வல்லினம் மிகும்.
பிழையைத் திருத்தினான்,

இதுவே பெயர்ச்சொல்லாக உருவெடுக்கையில் பிழைதிருத்தி.. பிழையை திருத்துபவன் என்று உருவகப்படுவதால் வல்லினம் மிகவில்லை..

(குறிப்பு: சந்தி இடம்பெறும் சொற்களைச் சேர்த்து எழுதுதலும் பிரித்து எழுதுதலும் வசதியினைப் பொறுத்தது.. அதைக்குறித்து கவலைப்படவேண்டாம்)

9.   என இனி என்ற சொற்களின் அடுத்துவரும் வல்லினம் மிகும்..

லொள்ளெனக் குரைத்தான், சிட்டெனப் பறந்தான்,
இனித் தடங்கல் இல்லையெனக் கொள்..

10.  நான்காம் வேற்றுமை உருபு ‘கு’வின் அடுத்து வரும் வல்லினம் மிகும்..

சந்தைக்குச்செல்கிறேன்.. ‘கு’வின் அடுத்து ச் மிகுந்துள்ளது..

(இந்த வேற்றுமையுருபு சமாச்சாரத்த இன்னொரு பதிவுல சொல்லுறேன்..)


கடைசியாக..
உரிச்சொல்.. அதாவது அடுத்துவரும் சொல்லுக்கு பில்டப் கொடுக்கும் சொல்
’உரிச்சொல்’ என்று சொல்லப்படும்..
.
சாலச்சிறந்தது..  இதுல சால என்பது உரிச்சொல்..

மேலே சொன்ன பத்து மேட்டர நல்லா உள்வாங்கிட்டீங்கன்னா.. சந்திப்பிழை வராதுன்னு ஆணித்தரமா நம்பலாம்..



இன்னும் கொஞ்சம் சரி / தவறுகளை இதுல சொல்லுறேன்.. முடிஞ்சா மைண்ட்ல வெச்சுக்கங்க..


   பிழை                                    திருத்தம்
உடமை                                 உடைமை    
அதாவது                                அஃதாவது    
அழும்பு                                 அழிம்பு            
இரும்பல்                                இருமல்
அருகாமையில்                          அருகில்
கைமாறு                                கைம்மாறு
கருவேப்பிலை                           கறிவேப்பிலை
கடப்பாறை                              கடப்பாரை
என்னமோ ஏதோ                         என்னவோ ஏதோ
(இந்த பாட்டுக்கு கார்க்கிக்கு அவார்டெல்லாம் கிடைச்சது தனிக்கதை..)

ஒருக்கால்                               ஒருகால்
எண்ணை                               எண்ணெய்
ஊர்ச்சுத்தி                               உகிர்ச் சுற்று
கோடாலி                                கோடரி
கோமியம்                               கோமயம்
கோர்வை                               கோவை
சந்தணம்                                சந்தனம்
தொப்புள்                                கொப்பூழ்
மோந்து                                 முகர்ந்து                                
பொதுவுடமை                           பொதுவுடைமை
சமயல்கட்டு                             சமயற்கட்டு
துடக்கம்                                துவக்கம் / தொடக்கம்
மென்மேல்                              மேன்மேல்
ஞாயம்                                  நியாயம்
பதட்டம்                                 பதற்றம்
வல்லுனர்                               வல்லுநர்
சுதந்திரம்                                சுதந்தரம்
எந்தன் /உந்தன்                          என்றன் / உன்றன்
சிலது / பலது                            சில / பல
மோர்ந்து                                முகர்ந்து

அப்புறம் கீழே உள்ள சொற்கள் இரண்டுவிதமாக எழுதினாலும் தவறில்லை..

அக்கரை – அக்கறை / சில்லரை –சில்லறை / சலங்கை – சதங்கை / சேலை –சீலை / மதிள்சுவர் - மதில்சுவர் / மங்களம் – மங்கலம் / முறிந்தது – முரிந்தது/ ஆணை – யானை / வரட்சி –வறட்சி / மெல்ல –மெள்ள / எந்திரம் –இயந்திரம் / நடத்து –நடாத்து / உருண்டை – உண்டை / உழுந்து – உளுந்து /ஊசல் –ஊஞ்சல் / சிவப்பு – சிகப்பு


எழுதும் முறைகளிலும் சில பிழைகள் நேர்கின்றன..

சந்திகள் அல்லாது வரும் சொற்களை பிரித்து எழுதுவதால் பொருள் மாறும் வாய்ப்புகள் அதிகம்..

இவர் கள் குடிக்கிறார்கள்  - இவர்கள் குடிக்கிறார்கள்
அவன் இடம் கேட்டேன் – அவனிடம் கேட்டேன்
செல்லவேண்டும் ஆனால் – செல்லவேண்டுமானால்

பிரித்து எழுதி படிப்பவரை இம்சிக்காமல் இருப்போம்..

எழுதியதை மீண்டும் ஒருமுறை வாசித்துப்பார்த்தல் நலம்.. அப்படியும் எதுவும் தவறு தெரியவில்லை என்றால் அவ்வையார் ஆரம்ப பாடசாலையில் இடம் பிடிக்க நாள் பார்க்க வேண்டியதுதான்..

இனியென்ன.. இந்த பதிவில் கண்ட பிழைகளை கமெண்டுகளாக போட்டுத் தாக்குங்கள்..
அடுத்த பதிவில் சந்திப்போம்..

நன்னி,

கணேஷ் நாராயணஸ்வாமி

@pizhaithiruthi



12 comments:

  1. எனக்கு மிகவும் தேவையான ஒரு பதிவு. பிழைதிருத்தி என்று சரியான பெயர் தான் வைத்துள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் என்னைப் போல பலரும் பயனடைவார்கள்.

    amasa32

    ReplyDelete
    Replies
    1. உங்கள்ளுக்கு மிக நன்றி...கருத்துகள் கொண்டு மிக தெளிவாக எடுத்துரைதீர்..இனி பிழை வராமல் எழுதி கற்க நல்ல பாடமாக அமைந்தது !

      நன்றி

      Delete
  2. மிக நல்லப்பதிவு பிழைதிருத்தி அவர்களே...

    ReplyDelete
  3. இடமாற்றுப் பிழைகள், என்னிடம் தாண்டவம் ஆடுகின்றது.. இதை தான் அதிகம் இந்தப்பதிவில் எதிர்பார்த்தேன். ஆனால், முதலிலேயே அதற்கான இட இல்லை என்று சொல்லிவிட்டீர்கள். இடமாற்றுப் பிழைகளை தவிர்க்க ஏதாவது சூத்திரம், ஃபார்முல, தந்திரம், டெக்னிக் இருக்கின்றதா? பல இடங்களில் என் காலை வாரி விடுவது இடமாற்றுப் பிழைகள் தான். என்னை கேட்டால் ர, ல, ந,ன மட்டும் போதும். ற, ண, ள தமிழுக்கே வேண்டாமே. இந்த சுழலில் இருந்து மீள வழி காட்டுக. பதிவை முழுவதும் படித்-'தேன்.'

    ReplyDelete
  4. சார்,

    முதற்கண் நன்றி.

    முகர்ந்து பிழை. ”மோந்து” தான் திருத்தம்-னு சொல்லிட்டு, ”மோர்ந்து”-கு “முகர்ந்து” தான் திருத்தம்னு சொல்லி இருகீங்க..

    இவண்,
    அருண்

    ReplyDelete
  5. 2) அப்புறம்,”இந்த பதிவில்” -> “ப்” வரும்?
    3) “அடுத்த பதிவில்” ->”ப்” வரும்?
    4) “கண்ட பிழைகளை” -> “ப்” வரும்?
    5) “பிழைகளை கமெண்டுகளாக” -> “க்” வரும்?
    6) ”கமெண்டுகளாக போட்டு” -> “ப்” வரும்?

    சரியாகத் தான் சொல்றேனுங்களா? அவ்வையார் ஆரம்ப பாடசாலையில் நான் சேர வேண்டி வருமோ? ஏதாவது தப்பாச் சுட்டி இருந்தேன்னா திருத்துங்க சார்...

    ReplyDelete
    Replies
    1. அதுல எல்லாம் சந்தி இல்லாதனால பொருள் மாறியிருக்கான்னு பாருங்க..

      Delete
    2. ஓ..பொருள் மாறல..:-) மிக்க நன்றிங்க சார்..

      Delete
  6. என்ன நடக்குதுங்க!

    ReplyDelete
  7. ’அ’ ’இ’ ’உ’ சுட்டெழுத்துக்களும், எ என்ற வினா எழுத்தும் தனியாகவோ,சொல்லின் கடைசியில் இயம்பி வேறு சொல்லுடன் புணர்கையில் அது வல்லின எழுத்தில் துவங்கும் சொல் என்றால் (க ச த ப ) அந்த இடத்தில் வல்லினம் மிகும்..

    இத வார்த்தை பிரயோகம் தான் பயப்பட வைக்கிது.. இத எளிமையா எழுத முடியுமா பிழை திருத்தி சார்?? நானும் பல இடத்துல படிக்க முயற்சி பண்றேன் முடில... 7வரை தான் பள்ளியில் தமிழ் அதானாலும் இருக்கலாம்
    இயம்பி புணர்கையில் இதை எல்லாம் எடுத்துட்டு வேற மாதிரி??

    @_சந்து
    லாஓசி!

    பிகு: சுட்டெழுத்துலதானே சொல் தொடங்கும்... எந்த அந்த அப்படி அங்க இந்த மாதிரி அப்பறம் எப்படி சொல்லோட கடைசில வரும்?? இல்ல இயம்பிக்கு அர்த்தமே வேறவா?

    ReplyDelete
  8. மிகவும் அருமையாக விளக்கம்..நன்றி ஐயா...வாழ்க தங்கள் தமிழ்த் தொண்டு..

    ReplyDelete
  9. அனைவரும் என்பதை அனைவர்களும் என்றும் மக்கள் என்பதை மக்கள்கள் என்றும் சொல்லலாமா?

    ReplyDelete